Thursday, April 5, 2012

தமிழ்99 | கேள்விகள்

கேள்விகள் | தமிழ்99:




தமிழ்99 குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகள்
1. தமிழ்99 விசைப்பலகை முறையில் எழுதிப் பழக எவ்வளவு நாளாகும்?
தமிழ்99 விசைப்பலகை அமைப்பைப் புரிந்து கொண்டு எழுதத் தொடங்க ஒரு சில நிமிடங்களே போதும். வேகமாக எழுதக் கை வர ஓரிரு வாரங்கள் பயிற்சி போதும். நீங்கள் முதன்முதலில் தமிழில் எழுதத் தொடங்கும்போதே தமிழ்99 முறையைப் பின்பற்றினால் இதைப் பழகிக் கொள்வது எளிது. ஏற்கனவே தமிங்கில விசைப்பலகை, பாமினி விசைப்பலகை போன்றவற்றைப் பழகி இருந்தால் தமிழ்99 கைவர கூடுதல் நாட்கள் ஆகலாம். ஆனால், தமிழ்99க்கு மாறுவது என்று முடிவெடுத்து விட்டால் நீங்கள் ஏற்கனவே பழகியிருக்கும் பிற விசைப்பலகை முறைகளை முற்றிலும் தூக்கிப் போட்டு விட்டு இதற்கு மாறினாலே வேகம் கைக்கூடும். உங்கள் வழமையான பணிகளுக்கு வேறு விசைப்பலகையையும் பழகுவதற்கு என்று நாளுக்கு சில மணித்துளிகள் தமிழ்99க்கு என்றும் ஒதுக்கினால், கற்றுக் கொள்வது சிரமம். நீங்கள் ஏற்கனவே பழகி இருக்கும் முறையையும் குழப்பி விடும்.
2. எனக்கு QWERTY ஆங்கில விசைப்பலகையில் ஆங்கிலத் தட்டச்சு நன்றாகத் தெரியும். ஆங்கிலத்தில் எழுத ஒரு விசைப்பலகை, தமிழுக்கு ஒரு விசைப்பலகை என்று பழகினால் மூளை குழம்பாதா?
குழம்பாது. ஏற்கனவே தமிழ்99 பழகி நன்றாக இருக்கும் நாங்களே சாட்சி ;)
தமிழ்99 பழகிய பிறகு ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வெவ்வெறு விசைப்பலகைகளில் எந்தக் குழப்பமும் இன்றி சீரான வேகத்தில் எழுதத் தொடங்கும்போது தான் நம் மூளையின் திறனை நாமே உணர்ந்து கொள்வோம்.
3. இதைக் கற்றுக் கொள்வது இலகுவா? எனக்கு அந்த அளவு திறமை இல்லையே?
இதைக் கற்றுக் கொள்வது மிகவும் இலகுவானது. தனித்த திறமை ஏதும் தேவை இல்லை. இந்த விசைப்பலகையைக் கற்றுக் கொள்வதற்கும் மொழியறிவுக்கும் தொடர்பு இல்லை.
4. யார் எல்லாம் தமிழ்99க்கு மாறலாம்? மாற வேண்டும்?
எல்லா தமிழர்களும் தான் ;)
வேகமாக, அயர்ச்சியின்றி, நிறைய தட்டச்ச உதவுவது தமிழ்99ன் சிறப்பு. எனவே இணையத்தில், கணினியில் தமிழில் எழுத நிறைய நேரம் செலவிடுபவர்கள், தொழில்முறையில் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் உடனடியாக தமிழ்99க்கு மாறிக் கொள்வது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது.
5. எனக்கு ஏற்கனவே QWERTY ஆங்கில விசைப்பலகை பயிற்சி உண்டு. ammaa = அம்மா என்று எழுதுவது இலகுவாக இருக்கிறதே? இது போல் எழுத நிறைய மென்பொருள்கள் இருக்கிறதே? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விசைப்பலகையைக் கற்கவா முடியும்? நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்? வேண்டுமானால் ஆங்கிலம் அறியாதவர்கள் மட்டும் தமிழ்99 பயன்படுத்தலாமோ?
ஆகிய இரண்டு கட்டுரைகளைப் படியுங்கள். இவற்றில் ஏன் தமிங்கில விசைப்பலகையில் இருந்து தமிழ்99க்கு மாற வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்வதென்றால்,
* ammaa = அம்மா என்று எழுதும் தமிங்கில விசைப்பலகையைக் காட்டிலும் இதில் வேகமாகவும், இலகுவாகவும், அயர்ச்சி இன்றியும், நிறைய தமிழில் எழுதலாம். QWERTy விசைப்பலகையில் ஒரு தமிழ்ச்சொல்லை எழுத கூடுதல் விசை அழுத்தங்கள் தேவை. தமிழ்99 முறையில் மிகக் குறைவான விசையழுத்தங்களே தேவை. இதனால், தமிழில் எழுதும் உங்கள் வேகம் கூடும்.
* ammaa = அம்மா என்று எழுதும் போது, உங்கள் மூளையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றி எழுதுவதால் உங்களை அறியாமல் உங்கள் சிந்தனை வேகம் குறைகிறது. தவிர, வருங்காலத் தமிழ்த் தலைமுறை
இப்படி தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்வது சரியா?
6. எனக்கு ஏற்கனவே தட்டச்சுப் பொறியில் தமிழில் எழுதுவதற்கான விசைப்பலகை முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் ஏன் தமிழ்99க்கு மாற வேண்டும்?
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு கட்டுரையைப் பார்க்கவும்.
7. தமிழ்99 முறையில் எழுத மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்? காசு கொடுக்க வேண்டுமா?
தமிழ்99 முறையில் எழுத இலவச மென்பொருள்களே போதும். http://tamil99.org/tamil99-software பாருங்கள்.
8. என்னிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகை கொண்டே எழுத முடியுமா? இல்லை, இதற்கு என்று புதிதாக விசைப்பலகை வாங்க வேண்டுமா?
உங்களிடம் ஏற்கனவே இருக்கிற விசைப்பலகையே போதும். கணினியில் தமிழில் எழுத உங்கள் விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கத் தேவையில்லை.
9. சில மென்பொருள்களில் தமிழ்99 தட்டச்சு முறை இருக்கிறது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள குறுக்கு வழிகள், வசதிகள் இல்லையே?
நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளில் அனைத்து தமிழ்99 குறுக்கு வழிகள், வசதிகளும் செயற்படுத்தப்படாமல் இருக்கலாம். http://tamil99.org/tamil99-software பரிந்துரைக்கப்பட்டுள்ள மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள்.
10. தமிழ்99 விசைப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களை நினைவில் கொள்ள என்ன வழி?
உயிர் குறில்கள் – இட நடு வரிசை
உயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.
அதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.
அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.
இப்படி நினைவில் வைத்துக் கொள்வது உதவலாம்.
11. நான் தினமும் தமிழில் நிறைய தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேனே? இதைப் பழகுவதற்காக எப்படி ஓரிரு வாரங்கள் அதைக் குறைத்துக் கொள்வது?
தமிழில் எழுதுவது என்பது உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் செய்யப் போகும் ஒன்று. ஓரிரு வாரங்கள் இதைப் பழகுவதற்காகக் கொஞ்சம் பொறுத்து முயற்சி செய்தால் வாழ்நாள் முழுதும் நீங்கள் தமிழ் எழுதச் செலவிடும் நேரத்தில் 30% முதல் 40% நேரம், அயர்ச்சியைக் குறைக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள்.

'via Blog this' : for http://tamil99.org/

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)