Sunday, April 15, 2012

பொன்னியின் செல்வன் : முதல் அனுபவங்கள்



அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்து முடித்து வாரங்கள் இரண்டு ஆகியும் அதைப்பற்றிய என் அனுபவங்களைப் பகிராதது கொஞ்சம் குறையாகவே இருந்து வந்தது.. இப்போது அதற்கான வேளை வந்தது.. முதல் முறை நமக்கு ஏற்படுகிற இனிய அனுபவங்கள் என்றும் நம் மனதில் பசுமறத்தாணி போல பதியும். பொன்னியின் செல்வனுடன் அத்தகைய என் அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்தகங்கள் படிப்பது எனக்கு பிடித்ததாயினும் ஏனோ தமிழ் வறலாற்றுப் புதினங்களைப் படிக்க சில மாதங்கள் முன்பு தான் காலம் கனிந்தது. அதற்கான அடித்தளம் ஒரு வருடம் முன்பே என் நண்பன் மூலம் எனக்கு ஏறபட்டது. பொன்னியின் செல்வன் வாசித்தது பற்றிய தன் அனுபவங்களை அவன் பகிரும்போது எனக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.

ஆனால், மதுரை மின் பதிப்பு வளைதளத்தில் (project madhurai) மின் புத்தகமாய் கிடைக்கும்போது அதை விடுவானேன் என்று இருந்தது எத்தகைய பிழை என்று ஆறு மாதங்களுக்கு முன் பொன்னயின் செல்வனை வாசிக்கத் தொடங்கிய பின்பே உணர்ந்தேன். முக்கியமாக பொன்னியன் செல்வன் மின் பதிப்பை வாசிப்பதற்காகவே கிண்ட்ல் மின் புத்தகக் கருவியை (Kindle e-book reader) என் அண்ணா மூலம் யூ.எஸ்.-லிருந்து தருவித்தேன். அதற்காக என் அண்ணாவுக்கு என் மிக்க நன்றிகள். பின்பு சென்னை புத்தக கண்காட்சியில் முல ஓவியங்களுடன் நல்ல பதிப்பாக விகடன் பதிப்பகம் வெளியிட்டதை தாமதமாகவே உணர்ந்தேன். அதை இனியாவது வாங்குவதற்கு எண்ணியிருக்கிறேன். அனால் அதுவரைக்கும் தாமதியாது 'கிண்ட்ல்' கருவி மூலமாகவே படிக்கத் தொடங்கி, படித்தும் முடித்துவிட்டேன்.

பொன்னியின் செல்வனை முதல் முறை படிக்கிற அனுபவமே தனி தான். அதை முதல் இரு அத்தியாயங்கள் வாசிக்கும்போதே உணர்ந்தேன்.அதன் சொற்சுவை, பொருட்சுவை, கற்பணைத்திறம் மற்றும் ஆழம், வருணணை நயங்கள், சுவாரசியம் மற்றும் காட்சியமைப்புகளின் திறமும் சுவையும் அளப்பரியவை. இத்தகு புத்தகத்தை இவ்வளவு நாள் வாசிக்காமல் இருந்தோமே என்று சிறிது வருந்தினேனாயினும், இப்போதாவது வாசிக்கத் தொடங்கினோமே என்று பின்பு மகிழந்தேன்.

பொன்னியின் செல்வனை வாசிக்கும்போது மற்ற வாசகர்கள் சொல்கிறது போலவே அக்கதாப்பாத்திறங்களோடும் அவ்வுலகத்தோடும் ஒன்றிவிடுவேன். அதிலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திறமாகவே மாறிவிடுவேன். கல்கியின் வருணணைகளால் அவர் கூறுகிற இடங்கள்  (பெரும்பாலானவை நாம் பார்த்தேயிறாதவை ) எனக்கு மிகவும் பரிட்சயமாகிவிட்டன. நம் கதாநாயகனான வல்லத்தரையன் வந்தியத்தேவன் சென்றவிடங்களெல்லாம் நானும் சேர்ந்து சுற்றிப்பார்த்தேன். கடம்பூர், குடந்தை, தஞ்சை, பழையாறை, மாமல்லபுரம், கோடிக்கறை, இலங்கை, நாகப்பட்டினம், திருவையாறு எல்லாம் நான் பார்த்துப் பழகிய இடங்களாகிவிட்டன. அமரர் கல்கியின் வருணணைகள் நம்மை அவ்விடங்களிலேயே அக்கதாப்பாத்திரங்களுடன் வாழ வைப்பதுடன் மேலும் நம்மையும் அக்கதாப்பாத்திரங்களாகவே வாழ வைத்திடுகின்றன.

கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கோடிக்கறை. அவ்விடத்தின் வருணணைகளும், அங்கே பூங்குழலி மான் போல் சுற்றித்திரியும் வருணணைகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்தவை.

பொன்னியின் செல்வனில் என்னை மிகக் கவர்ந்தது அமரர் கல்கியின் சுவாரசியமாக கதை சொல்லுகிற விதம். படிக்க அமர்ந்துவிட்டால் நம் நேரம் போவதே தெரியாமல் கதையோடு ஒன்றிவிடுவோம். 'சுவாரசியத்தின் சாகரம் பொன்னியின் செல்வன்' என்று சொன்னால் அது மிகையாகாது. சில சமயம் நல்லிரவில் தூக்கத்தையும் மறந்து படித்துக்கொண்டிருப்பேன், அல்லது படிக்கும்போதே இரவு நேரமாகி தூங்கிவிட்டிருப்பேன். படிக்கிற பக்கங்கள் ஒரு அளவாகவே தெரியாது. சில சமயங்களில் சுவாரசிய மிகுதியால் நூறு நூற்றைம்பது பக்கங்கள் கூட ஒரே நாளில் படித்துத் தள்ளியிருக்கிறேன். சில சமயங்களில் காட்சிகளின் வரிசையை மாற்றியமைத்துச் சொல்லியிருப்பது சுவாரசியத்தை மேலும் கூட்டுயிருக்கின்றது. அமரர் கல்கியின் கதை சொல்லுகிற விதம் மற்ற எல்லா கதாசிறியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்  மேலும் திரைப்பட இயக்குனர்களுக்கும் மிகச்சிறந்த படிப்பினையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. கதையில் வரும் சிறியது முதல் மிக முக்கியக் கதாப்பாத்திறங்கள் வரை மிக நுணுக்கமாகக் கையாண்டிருக்கும் திறமை அளப்பரியது.

கதையில் எனக்கு மிகப்பிடித்த கதாப்பாத்திறங்கள்
*  'பொன்னியின் செல்வர்'-ஆகிய அருள்மொழி வர்மர் - காரணம் அவரின் சொல், சிந்தனை, செயல் ஆகியவற்றின் மேன்மை.
* வல்லத்தரையன் வந்தியத்தேவன் -அவனின் துணிச்சல் மற்றும் எத்தகு சோதனைக்காலங்களிலும் அவன் குறும்புத்தனம் நம்மை புன்னகைக்க வைப்பது.
* நந்தினி - அவளின் சொல் மற்றும் செயல்களின் உள்ளர்த்தங்களை அறிவது மிகப் புதிரானது.
*  குந்தவை - அவளின் சொல் மற்றும் செயலின் தெளிவு மற்றும் "உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..." என்று வாணர் குலத்து வீரருடனான அன்பு.
* பூங்குழலி - அவளின் துணிச்சலான அதே சமயத்தில் புதிரான குணம்.
* சேந்தன் அமுதன் - அவனின் பக்தியும், எதையும் எதிர்பாராத உயர்குணம்.
* வானதி - அவளின் பால்மனம் மாறாத குணம் மற்றும் அருள்மொழி வர்மர் மீதான நெஞ்சுரம் மிக்கக் காதல்.
* ஆழ்வார்க்கடியானின் ஒற்றுத்திறன் மற்றும் சமயோஜித செயல்கள்
* மணிமேகலை - காரணம் அவளின் எதையும் எதிர்பாராத, உள்ளம் உருகி நெஞ்சை நெகிழ வைத்த, வந்தியத்தேவன் மீதான உண்மை அன்பு.


கதையில் எனக்கு மிகப்பிடித்த பாகம் சொல்லவே தேவையில்லை- ஐந்தாம் பாகம். நம்மைப் புரட்டிப் போடுகிற பாகம் இதுவென்றால் மிகையாகாது. விறுவிறுப்பின் உச்சகட்டமான பாகம். அதைப்படிக்கத் தொடங்கும்போது அங்கு சோழ நாட்டில் அடிப்பதாகச் சொல்லப்படுகிற பெரும்புயல் நம் உள்ளத்திலும் வீசத்தொடங்கிவிடுகிறது. பின்பு இறுதியில் பொன்னியின் செல்வரின் தீரச்செயலின் பின் எல்லாம் அமைதிப்படுகிறது. இருந்தாலும் இறுதியில் இருக்கும் சிறு நெருடல்கள் அமரர் கல்கியின் முடிவுரையால் தீர்ந்து போகிறது.


அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனும் அதன் பெருமையிலும் புகழிலும் தமிழர்களின் அபிமானத்திலும் அமரத்தன்மை வாய்ந்தது என்றால் அது மிகையாகாது. படிக்காதவர்கள் தவறாமல் படியுங்கள், படித்தபின் நீங்களே தவறாமல் மறுபடியும் படிப்பீர்கள். தமிழில் உங்கள் சொல், சிந்தனை, மொழித்திறம் மற்றும் பற்று மெருகேறியிருப்பதை கண்கூடாய் உணர்வீர்கள். வறலாற்றுப் புதினங்களின் மீதான தாகம் தாமாகவே அதிகரித்திருக்கும். அதன் விளைவாகவே இப்போது அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி, பார்த்திபன் கனவு ஆகிய புதினங்களை முடித்துவிட்டு சிவகாமியின் சபதத்தையும் தொடங்கியிருக்கின்றேன். இந்த வாசகப்பயணம் மேலும் மேலும் தொடரும் என்பது உறுதி.. நன்றி..


முழுக் கதையுள்ள வலைதளம்- பொன்னியின் செல்வன் - தமிழ் விக்கி
தறவிறக்கத் தளம் - மதுரை தொகுப்பு
ஆன்ட்ராய்டு - மென்பொருள் 

2 comments:

  1. மிக அருமையான புத்தகத்தை படிதிருக்கிறீர்கள்.

    அருள்மொழி வர்மர் , வல்லத்தரையன் வந்தியத்தேவன்.
    நந்தினி ,குந்தவை, பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, மணிமேகலை போன்றவர்களின் இளமைப் பருவத்தை பற்றி தாங்கள் தெரிய வேண்டாமா?

    அவர்களின் செயலுக்கு காரணம் என்ன?

    உதாரணமாக ரவிதாசன் ஏன் இப்படி சோழ ராஜ்யத்தின் மீது வெஞ்சனம் கொண்டு அலைந்தான்? உண்மையில் யார் அவன்? இது பற்றி தெரிந்து கொள்ள எனது மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்) கட்டாயம் படியுங்கள்.

    பொன்னியின் செல்வனுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை அனுஷா தனது காவிரி மைந்தனில் எழுதியிருக்கிறார். அதையும் தாங்கள் படிக்கலாம்.

    இந்த மூன்று புத்தகங்களும் சோழ சாம்ராஜ்யத்தின் அன்றைய நிலையை எடுத்துச் சொல்லும்.
    மலர்ச்சோலை மங்கை படித்த பிறகு உங்கள் விமர்சனங்களை எனக்கு தெரிவியுங்கள்

    அலை பேசி எண் 9444088535
    Email lkailasam@yahoo.co.in

    அன்புடன்
    டாக்டர் எல். கைலாசம்
    ஆசிரியர்: மலர்ச்சோலை மங்கை, மணிமகுடம், கயல்

    ReplyDelete
    Replies
    1. திருமிகு கைலாசம் அவர்களுக்கு, தங்களின் மலர்சோலை மங்கை மற்றும், அனுஷாவின் காவிரி மைந்தன் பற்றிய அறிமுகத்துக்கு என் மிக்க நன்றிகள். தாங்கள் கூறியது படி பொன்னியின் செல்வனின் முன் பின் கதைகளைப் படிக்க நானும் ஆவலாக உள்ளேன். நான் தவறாமல் அவற்றைப் படித்து தங்களுக்கு என் கருத்துக்களைத் தெரிவிப்பேன்.

      Delete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)