Saturday, April 28, 2012

மணிமேகலை : பொன்னியின் செல்வனில்


மணிமேகலை என்றதும் பொதுவாக நம் நினைவுக்கு வருவது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீத்தலை சாத்தனாரின் படைப்பு. ஆனால், எனக்கு அது பொ.முவில் (பொன்னியின் செல்வன் படிப்பதற்கு முன்). பொ.பியில் (பொன்னியின் செல்வன் படித்த பின்) நினைவுக்கு வருவது யாரெனில், பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் அறிந்த கதாப்பாத்திரமான மணிமேகலை.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனில் மனதில் பதிவதாகிய எத்தனையோ முக்கியக் கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. பொன்னியின் செல்வர், வந்தியத்தேவர், குந்தவை, நந்தினி முதலானோர் கதையின் கருவிலே பயனித்தவர்கள். மணிமேகலை ஒரு மிக முக்கியமல்லாத கதாப்பாத்திரமாயினும், நம் நெஞ்சைத் தொட்டக் கதாப்பாத்திரங்களுள் மணிமேகலையும் ஒன்றாக இருக்கும். இங்கு அக்கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. அக்கதாப்பாத்திரம் நம் மனதில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.

அது என்ன விசேஷ தாக்கம்?. அன்பு.

அன்பு

''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்."

- எனும் பொய்யாமொழியின் படி, ஆர்வலராகிய வந்தியத்தேவரை மட்டுமல்லாமல் அதை வாசித்த என்னையும் புன்கண்ணீர் சிந்தவைத்த கதாப்பாத்திரம் அது. அன்பு, அதுவே கடவுளாகக் கருதப்படுவது. ஆனால் அதன் அறிதலும் புரிதலும் நம்மிடையே வித்தியாசப்படுகின்றது. 

சில அன்பு இரத்த உறவினால் ஏற்படுவது. காதலன்-காதலி, கணவன்-மனைவி ஆகியவர்களிடையே உள்ள அன்பு ஒருவரிடம் ஒருவர் கொண்ட எதிர்பார்ப்பினால் அமைவது. உறவுகளிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பு உண்டு. உலகில் மிக உன்னதமாகக் கருதப்படும் உறவாகிய தாய் தம் மக்களிடம் காட்டுகின்ற தன்னலம் பாராத எதையும் எதிர்பாராத அன்புக்கு ஈடு இணையில்லை என்றறிவோம். 

சில அன்பு இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட உறவால் அமைவது. நல்ல குருவுக்கும் சிஷ்யனுக்கும் ஏற்படுகின்ற அன்பில் குருவாவர் சிஷ்யனிடத்தில் எதையும் எதிபாராமல் அன்பு செலுத்துகின்றாராயினும், சிஷ்யன் குருவிடம் கல்வியாகிய பலன் வேண்டியே அன்பு செலுத்துகின்றான். நல்ல நண்பர்களிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பைக் காணலாம்.

இவையெல்லாவற்றையும் போல் சக மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும்  எதையும் எதிர்பாராத அன்பும் ஜீவகாருண்யமும் வள்ளலார் 'வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்வதாகிய அன்பும் மிக உன்னதமாக விளங்குகின்றன.

இவைகளில் உள்ளமைந்த  எதையும் எதிர்பாராத அன்பு இறைவனிடமிருந்தே இவ்வுறவுகளின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது. அது நம் உள்ளத்தை உருக்கி நெஞ்சத்தை நெகிழ வைக்கக்கூடியதாக அமைகின்றது. இத்தகைய அன்பையே மணிமேகலை வல்லத்தரையன் வந்தியத்தேவரிடம் வெளிப்படுத்தினாள் என்றால் அது மிகையாகாது. அது எவ்வாறு?

மணிமேகலையும் வந்தியத்தேவரும்

பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அறிந்திருக்கக்கூடியது வல்லத்தரையர் வந்தியத்தேவருக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் இடையேயான காதல். படிக்கும்போது (குறிப்பாக முதல்முறை படித்துக்கொண்டிருக்கும்போது) வாசகர்களாகிய நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இவர்களிடையேயான காதலாகிய அன்புதான். அதனால் அதனுடனேயே சித்தரிக்கப்பட்டிருந்ததாயினும் மணிமேகலை  வந்தியத்தேவரிடம் கொண்ட காதலின் முக்கியத்துவத்தை நாம் கதையின் இறுதியை அடையும்வரை உணர்வதில்லை.

குந்தவை தேவியைப்போலே நாமும் 'ஏன் இந்தப் பெண் இப்படி பிச்சியைப்போல் நடக்கிறாள்?' என மணிமேகலையைப் பற்றி எண்ணுகின்றோம். பின்பே, மணிமேகலைக்கு வந்தியத்தேவருடனான காதல், வெறும் காதலல்ல, எதையும் எதிர்பாரத தெய்வீகமான அன்பு என்று விளங்குகின்றது.

குந்தவையின் காதல்
நிச்சயமாய் குந்தவி தேவியார் வந்தியத்தேவரிடம் கொண்ட காதல் உன்னதமானதும் போற்றத்தக்கதாகும். எப்பேர்பட்ட பேரரசர்களும், அரச குமாரர்களும் குந்தவை பிராட்டியின் திருக்கரம் பற்றத் தவம் கிடக்கின்ற பொழுதும், என்றொ ஒரு காலத்தில் அரசாண்ட வாணர் குலத்தில் பிறந்தவரும், தன் தமையனார் ஆதித்த கரிகாலரின் கட்டளைக்கு பணி செய்வதுமாய் வல்லத்தரையன் வந்தியத்தேவரை அறிந்த பின்னரும், தான் கண்ட மாத்தரத்தில் இவை யாவையையும் பாராமல் அவன் மேல் காதல் கொண்டவள் குந்தவை தேவியார்.

பின்பு வந்தியத்தேவர் தம் சலன புத்தியால் சிறைப்பட்டபோதும்,

"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.! உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

என்று கூறிய வார்த்தைகள் தமிழராகிய நம் அனைவராலும் போற்றத்தக்கது. உன்னதமான தெய்வீகக் காதலின்  இலக்கணமாவது. பின்னர் அவரே தன் தமையனைக் கொன்ற பழிகொண்ட பின்னும், அவர் மேல் முழு நம்பிக்கை கொண்டு அவர்பால் பரிவு கொண்டவளாவாள்.

தெய்வீக அன்பு

ஆனால் மணிமேகலையின் அன்பு இவையெல்லாவற்றையும் விட ஒரு படி மேலானதே. எவ்வாறு?

தான் காணாவிட்டாலும் அண்ணன் கந்தமாறனின் தோழனைப் பற்றிய பேச்சுகளினால் வந்தியத்தேவர் மீது முதலில் வாஞ்சை கொண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தவள் மணிமேகலை. பின்பு அந்த அண்ணனே வந்தியத்தேவரை மறக்கச் சொல்லும்போது, நாடாளக்கூடிய இளவரசராகிய ஆதித்த கரிகாலரை மணந்து பிற்காலத்தில் சோழத்துப் பட்ட மகிஷியாகக்கூடய வாய்ப்பு இருந்தும், அதை மறுத்து, தான் நினைந்த வந்தியத்தேவர் மீதான அன்பு மாறாமல், அதற்கு முயற்சியும் செய்யாமல் மேலும் அதை ஆழமாக்கிக் கொண்டவள். பலர் அறிய அவள் உள்ளத்தை வெளிப்படுத்தத் தயங்கவும் இல்லை.

கள்ளம் கபடமற்ற குணத்தவளாய் நந்தினியிடமே தன் காதல் இரகசியங்களை வெளியிட்டு உதவி கேட்டவள், பின் ஏமாந்து, வந்தியத்தேவர் மேல் கொலைக்குற்றம் வந்தவுடன் அவரைத்தப்புவிக்க தானே அக்கொலையைச் செய்ததாக அழுதாள், புலம்பினாள், ஒரு பிச்சியைப்போல் அனைவரிடமும் மன்றாடினாள். அனைவரும் (நாமும்) அவளைப் பைத்தியமென்றே நினைத்தோம், 'ஏன் இவ்வாறு செய்கிறாள்?' என்று மயங்கினோம்.

பின் கந்தமாறன் வந்தியத்தேவரைக் கொன்றுவிட்டதாகப் பிதற்றியதும், முழுவதும் மனதொடிந்துப் போனாள்,அவ்வாறே நம்பி நிஜமாகவே பிச்சியானாள். நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலிலே,

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

எனக் பாடியதற்குத் தானும் இலக்கணமானாள். 

உதிர்ந்த மலரும் உதிராத அன்பு வடுவும்

"என் தங்கையை நீ மறந்துவிடு! பெரிய இடத்தில் அவளைக் கொடுக்கப் போகிறோம்!" என்று கந்தமாறன் சொன்னதும், வந்தியத்தேவர் உண்மையாகவே அவளை மறந்து விட முயன்றார். இளையபிராட்டியைச் சந்தித்ததும் அதற்குத் துணையாயிருந்தது. ஆனால் மணிமேகலையோ தன் மனத்தை மாற்றிக் கொள்ளவில்லை; மாற்றி கொள்ள முயலவும் இல்லை. அந்தப் பேதைப் பெண் மணிமேகலை! அவள் எதற்காக வந்தியத்தேவரிடம் இத்தகைய தெய்வீகமான அன்பு வைக்க வேண்டும்? இவரைக் காப்பாற்ற வேண்டிக் கொலைக் குற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள ஏன் முன் வரவேண்டும்? ஏன் இப்படிப் பைத்தியமாக வேண்டும்? அதனால் தனியே பிரிந்து, அலைந்து, மலருடல் மெலிந்து ஏன் மடியும் நிலைக்குப் போகவேண்டும்? அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு; தன் உயிர் நீக்கியும் தன் அன்பரைக் காக்க வேண்டித் துணிந்த தெய்வீக அன்பு. என்னே இந்த அன்பின் உன்னதம்? 

வந்தியத்தேவர் மீண்டும் அவளை அந்த மரணத் தருவாயில் வந்து பார்த்த போது, அவள் அவரைச் சொர்க்கத்தில் காண்பதாக அவள் எண்ணியதும், அந்நிலையிலேயே தன் உயிரை உகிர்த்ததுமாகிய அன்பு வந்தியத்தேவரை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் உருக்கி, நெஞ்சத்தை நெகிழ வைத்தது; நம் மனத்திலும் பெரும் பாரத்தையும், அன்பு வடுவையும் ஏற்படுத்தி நம் (குறிப்பாக என்) கண்களிலும் சிறுதுளிக் கண்ணீர் வரச்செய்த்து.

வாழ்க அமரர் கல்கி புகழ்

அமரர் கல்கியின் மணிமேகலை கதாப்பாத்திரம் உண்மையோ கற்பனையோ நான் அறியேன். அறிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் அக்கதாப்பாத்திரம் உண்மையிலேயே நம் மனதைத் தொட்டது; பதிந்தது. இவ்வகையில் சிறியது முதல் மிக முக்கியக் கதாப்பாத்திரங்கள் வரைக்கும் மிக நுணுக்கமாகச் செதுக்கி விளக்கமாக வழங்கிய அமரர் கல்கியின் திறனை என்னவென்று பாராட்டுவது! அவரின் இத்தகு படைப்பாற்றலுக்கு ஈடு இணையில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் படிப்பினையாகவும் மானசீக குருவாகவும் அமைந்துள்ள அமரர் கல்கியின் புகழ் வாழ்க பல்லாண்டு!

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)