Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Wednesday, August 29, 2012

சொன்னது நீதானா..??

ஒவ்வொரு வரியிலும் உணர்ச்சி பொங்கும் இனிய இசையுடன் கூடிய பைந்தமிழ்ப் பாடல்.. :)

"ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா..
ஒரு மனதில் ஓருமுறைதான் வளரும் உறவல்லவா.."

-- அருமைத்தமிழ்ப் பண்பாட்டைப் பாடுகிற பண்...

சதிராடு தமிழே நீயாடு..

இப்படியும் ஒரு காதல் பாட்டு, கிராமிய ரொமான்ஸ் கமழ, தமிழ் உண்மையிலேயே சதிராடுது. இந்த simple perfection, இன்னைக்கு இருக்கற காதல் பாட்டுக்கள் எல்லாம் பிச்சை வாங்கணும். look at how the balance between the wild and the civilized dances through the song, its like saddling a crazy wild horse and winning a race with poise!  this truly is the desired essence of man, sublime divinity emerging out of raw emotions. இதுக்கு மேல மனுஷனுக்கு இசை வேணுமா அப்டின்னு கேக்க வைக்கிது.


பாடல் வரிகள்:

கட்டோடு  குழலாட  ஆட..  ஆட..
கண்ணென்ற  மீனாட  ஆட..  ஆட..
கொத்தோடு  நகையாட  ஆட..  ஆட..
கொண்டாடும்  மயிலே  நீயாடு
                                 (கட்டோடு  குழலாட..)

பாவாடை  காற்றோடு  ஆட..  ஆட
பருவங்கள்  பந்தாட  ஆட  ஆட..
காலோடு  கால்  பின்னி  ஆட  ஆட..
கள்ளுண்ட  வண்டாக  ஆடு
                                 (கட்டோடு  குழலாட..)

முதிராத  நெல்லாட  ஆட..  ஆட..
முளைக்காத  சொல்லாட  ஆட..  ஆட..
உதிராத  மலராட  ஆட..
சதிராடு  தமிழே  நீயாடு
                                 (கட்டோடு  குழலாட..)

தென்னை  மரத்  தோப்பாக..  தேவாரப்  பாட்டாக..
புன்னை  மரப்  பூச்சொரிய  சின்னவளே  நீயாடு
கண்டாங்கி  முன்னாட..  கன்னி  மனம்  பின்னாட..
கண்டு  கண்டு  நானாட..  செண்டாக  நீயாடு..  செண்டாக  நீயாடு..
                                 (கட்டோடு  குழலாட..)

பச்சரிசிப் பல்லாட.. பம்பரத்து  நாவாட..
மச்சானின்  மனமாட  வட்டமிட்டு  நீயாடு..
வள்ளி  மனம்  நீராட..  தில்லை  மனம்  போராட..
ரெண்டு  பக்கம்  நானாட  சொந்தமே  நீயாடு.. சொந்தமே  நீயாடு..
                                 (கட்டோடு  குழலாட..)

நன்றி: http://gskg.wordpress.com/2010/12/22/முளைக்காத-சொல்-ஆட-ஆட/

மாற்றங்கள்: பாடல் வரிகள் திருத்தப்படன.

Saturday, April 28, 2012

மணிமேகலை : பொன்னியின் செல்வனில்


மணிமேகலை என்றதும் பொதுவாக நம் நினைவுக்கு வருவது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீத்தலை சாத்தனாரின் படைப்பு. ஆனால், எனக்கு அது பொ.முவில் (பொன்னியின் செல்வன் படிப்பதற்கு முன்). பொ.பியில் (பொன்னியின் செல்வன் படித்த பின்) நினைவுக்கு வருவது யாரெனில், பொன்னியின் செல்வன் வாசித்தவர்கள் அறிந்த கதாப்பாத்திரமான மணிமேகலை.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனில் மனதில் பதிவதாகிய எத்தனையோ முக்கியக் கதாப்பாத்திரங்கள் இருக்கின்றன. பொன்னியின் செல்வர், வந்தியத்தேவர், குந்தவை, நந்தினி முதலானோர் கதையின் கருவிலே பயனித்தவர்கள். மணிமேகலை ஒரு மிக முக்கியமல்லாத கதாப்பாத்திரமாயினும், நம் நெஞ்சைத் தொட்டக் கதாப்பாத்திரங்களுள் மணிமேகலையும் ஒன்றாக இருக்கும். இங்கு அக்கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசவில்லை. அக்கதாப்பாத்திரம் நம் மனதில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.

அது என்ன விசேஷ தாக்கம்?. அன்பு.

அன்பு

''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்."

- எனும் பொய்யாமொழியின் படி, ஆர்வலராகிய வந்தியத்தேவரை மட்டுமல்லாமல் அதை வாசித்த என்னையும் புன்கண்ணீர் சிந்தவைத்த கதாப்பாத்திரம் அது. அன்பு, அதுவே கடவுளாகக் கருதப்படுவது. ஆனால் அதன் அறிதலும் புரிதலும் நம்மிடையே வித்தியாசப்படுகின்றது. 

சில அன்பு இரத்த உறவினால் ஏற்படுவது. காதலன்-காதலி, கணவன்-மனைவி ஆகியவர்களிடையே உள்ள அன்பு ஒருவரிடம் ஒருவர் கொண்ட எதிர்பார்ப்பினால் அமைவது. உறவுகளிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பு உண்டு. உலகில் மிக உன்னதமாகக் கருதப்படும் உறவாகிய தாய் தம் மக்களிடம் காட்டுகின்ற தன்னலம் பாராத எதையும் எதிர்பாராத அன்புக்கு ஈடு இணையில்லை என்றறிவோம். 

சில அன்பு இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட உறவால் அமைவது. நல்ல குருவுக்கும் சிஷ்யனுக்கும் ஏற்படுகின்ற அன்பில் குருவாவர் சிஷ்யனிடத்தில் எதையும் எதிபாராமல் அன்பு செலுத்துகின்றாராயினும், சிஷ்யன் குருவிடம் கல்வியாகிய பலன் வேண்டியே அன்பு செலுத்துகின்றான். நல்ல நண்பர்களிடையேயும் எதையும் எதிர்பாராத அன்பைக் காணலாம்.

இவையெல்லாவற்றையும் போல் சக மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும்  எதையும் எதிர்பாராத அன்பும் ஜீவகாருண்யமும் வள்ளலார் 'வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்வதாகிய அன்பும் மிக உன்னதமாக விளங்குகின்றன.

இவைகளில் உள்ளமைந்த  எதையும் எதிர்பாராத அன்பு இறைவனிடமிருந்தே இவ்வுறவுகளின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது. அது நம் உள்ளத்தை உருக்கி நெஞ்சத்தை நெகிழ வைக்கக்கூடியதாக அமைகின்றது. இத்தகைய அன்பையே மணிமேகலை வல்லத்தரையன் வந்தியத்தேவரிடம் வெளிப்படுத்தினாள் என்றால் அது மிகையாகாது. அது எவ்வாறு?

மணிமேகலையும் வந்தியத்தேவரும்

பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அறிந்திருக்கக்கூடியது வல்லத்தரையர் வந்தியத்தேவருக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் இடையேயான காதல். படிக்கும்போது (குறிப்பாக முதல்முறை படித்துக்கொண்டிருக்கும்போது) வாசகர்களாகிய நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இவர்களிடையேயான காதலாகிய அன்புதான். அதனால் அதனுடனேயே சித்தரிக்கப்பட்டிருந்ததாயினும் மணிமேகலை  வந்தியத்தேவரிடம் கொண்ட காதலின் முக்கியத்துவத்தை நாம் கதையின் இறுதியை அடையும்வரை உணர்வதில்லை.

குந்தவை தேவியைப்போலே நாமும் 'ஏன் இந்தப் பெண் இப்படி பிச்சியைப்போல் நடக்கிறாள்?' என மணிமேகலையைப் பற்றி எண்ணுகின்றோம். பின்பே, மணிமேகலைக்கு வந்தியத்தேவருடனான காதல், வெறும் காதலல்ல, எதையும் எதிர்பாரத தெய்வீகமான அன்பு என்று விளங்குகின்றது.

குந்தவையின் காதல்
நிச்சயமாய் குந்தவி தேவியார் வந்தியத்தேவரிடம் கொண்ட காதல் உன்னதமானதும் போற்றத்தக்கதாகும். எப்பேர்பட்ட பேரரசர்களும், அரச குமாரர்களும் குந்தவை பிராட்டியின் திருக்கரம் பற்றத் தவம் கிடக்கின்ற பொழுதும், என்றொ ஒரு காலத்தில் அரசாண்ட வாணர் குலத்தில் பிறந்தவரும், தன் தமையனார் ஆதித்த கரிகாலரின் கட்டளைக்கு பணி செய்வதுமாய் வல்லத்தரையன் வந்தியத்தேவரை அறிந்த பின்னரும், தான் கண்ட மாத்தரத்தில் இவை யாவையையும் பாராமல் அவன் மேல் காதல் கொண்டவள் குந்தவை தேவியார்.

பின்பு வந்தியத்தேவர் தம் சலன புத்தியால் சிறைப்பட்டபோதும்,

"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.! உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

என்று கூறிய வார்த்தைகள் தமிழராகிய நம் அனைவராலும் போற்றத்தக்கது. உன்னதமான தெய்வீகக் காதலின்  இலக்கணமாவது. பின்னர் அவரே தன் தமையனைக் கொன்ற பழிகொண்ட பின்னும், அவர் மேல் முழு நம்பிக்கை கொண்டு அவர்பால் பரிவு கொண்டவளாவாள்.

தெய்வீக அன்பு

ஆனால் மணிமேகலையின் அன்பு இவையெல்லாவற்றையும் விட ஒரு படி மேலானதே. எவ்வாறு?

தான் காணாவிட்டாலும் அண்ணன் கந்தமாறனின் தோழனைப் பற்றிய பேச்சுகளினால் வந்தியத்தேவர் மீது முதலில் வாஞ்சை கொண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தவள் மணிமேகலை. பின்பு அந்த அண்ணனே வந்தியத்தேவரை மறக்கச் சொல்லும்போது, நாடாளக்கூடிய இளவரசராகிய ஆதித்த கரிகாலரை மணந்து பிற்காலத்தில் சோழத்துப் பட்ட மகிஷியாகக்கூடய வாய்ப்பு இருந்தும், அதை மறுத்து, தான் நினைந்த வந்தியத்தேவர் மீதான அன்பு மாறாமல், அதற்கு முயற்சியும் செய்யாமல் மேலும் அதை ஆழமாக்கிக் கொண்டவள். பலர் அறிய அவள் உள்ளத்தை வெளிப்படுத்தத் தயங்கவும் இல்லை.

கள்ளம் கபடமற்ற குணத்தவளாய் நந்தினியிடமே தன் காதல் இரகசியங்களை வெளியிட்டு உதவி கேட்டவள், பின் ஏமாந்து, வந்தியத்தேவர் மேல் கொலைக்குற்றம் வந்தவுடன் அவரைத்தப்புவிக்க தானே அக்கொலையைச் செய்ததாக அழுதாள், புலம்பினாள், ஒரு பிச்சியைப்போல் அனைவரிடமும் மன்றாடினாள். அனைவரும் (நாமும்) அவளைப் பைத்தியமென்றே நினைத்தோம், 'ஏன் இவ்வாறு செய்கிறாள்?' என்று மயங்கினோம்.

பின் கந்தமாறன் வந்தியத்தேவரைக் கொன்றுவிட்டதாகப் பிதற்றியதும், முழுவதும் மனதொடிந்துப் போனாள்,அவ்வாறே நம்பி நிஜமாகவே பிச்சியானாள். நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலிலே,

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

எனக் பாடியதற்குத் தானும் இலக்கணமானாள். 

உதிர்ந்த மலரும் உதிராத அன்பு வடுவும்

"என் தங்கையை நீ மறந்துவிடு! பெரிய இடத்தில் அவளைக் கொடுக்கப் போகிறோம்!" என்று கந்தமாறன் சொன்னதும், வந்தியத்தேவர் உண்மையாகவே அவளை மறந்து விட முயன்றார். இளையபிராட்டியைச் சந்தித்ததும் அதற்குத் துணையாயிருந்தது. ஆனால் மணிமேகலையோ தன் மனத்தை மாற்றிக் கொள்ளவில்லை; மாற்றி கொள்ள முயலவும் இல்லை. அந்தப் பேதைப் பெண் மணிமேகலை! அவள் எதற்காக வந்தியத்தேவரிடம் இத்தகைய தெய்வீகமான அன்பு வைக்க வேண்டும்? இவரைக் காப்பாற்ற வேண்டிக் கொலைக் குற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள ஏன் முன் வரவேண்டும்? ஏன் இப்படிப் பைத்தியமாக வேண்டும்? அதனால் தனியே பிரிந்து, அலைந்து, மலருடல் மெலிந்து ஏன் மடியும் நிலைக்குப் போகவேண்டும்? அன்பு; எதையும் எதிர்பாராத அன்பு; தன் உயிர் நீக்கியும் தன் அன்பரைக் காக்க வேண்டித் துணிந்த தெய்வீக அன்பு. என்னே இந்த அன்பின் உன்னதம்? 

வந்தியத்தேவர் மீண்டும் அவளை அந்த மரணத் தருவாயில் வந்து பார்த்த போது, அவள் அவரைச் சொர்க்கத்தில் காண்பதாக அவள் எண்ணியதும், அந்நிலையிலேயே தன் உயிரை உகிர்த்ததுமாகிய அன்பு வந்தியத்தேவரை மட்டுமல்ல, நம் உள்ளத்தையும் உருக்கி, நெஞ்சத்தை நெகிழ வைத்தது; நம் மனத்திலும் பெரும் பாரத்தையும், அன்பு வடுவையும் ஏற்படுத்தி நம் (குறிப்பாக என்) கண்களிலும் சிறுதுளிக் கண்ணீர் வரச்செய்த்து.

வாழ்க அமரர் கல்கி புகழ்

அமரர் கல்கியின் மணிமேகலை கதாப்பாத்திரம் உண்மையோ கற்பனையோ நான் அறியேன். அறிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் அக்கதாப்பாத்திரம் உண்மையிலேயே நம் மனதைத் தொட்டது; பதிந்தது. இவ்வகையில் சிறியது முதல் மிக முக்கியக் கதாப்பாத்திரங்கள் வரைக்கும் மிக நுணுக்கமாகச் செதுக்கி விளக்கமாக வழங்கிய அமரர் கல்கியின் திறனை என்னவென்று பாராட்டுவது! அவரின் இத்தகு படைப்பாற்றலுக்கு ஈடு இணையில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் படிப்பினையாகவும் மானசீக குருவாகவும் அமைந்துள்ள அமரர் கல்கியின் புகழ் வாழ்க பல்லாண்டு!

Thursday, April 12, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!


கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய மூத்தவன்

உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்

கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.

மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.

அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,

கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி   தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்

மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்

வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்

வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!

தமிழனாய் வாழ்வோம்
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!

நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.

Monday, March 19, 2012

தீதும், நன்றும், பிறர் தர வாரா;

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]
பெரியோரை வியத்தலும் இலமே!
பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]
நன்றி: http://vasantruban.blogspot.com/2012/03/blog-post.html?spref=bl

Saturday, May 14, 2011

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? - முத்துக்குட்டி




மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும்.  தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். 


இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?
            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 
            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?
            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 
சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்? 
            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 
அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 
சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?
நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 
‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா?

அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 
            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 
பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 
‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா?  ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா?  ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!

சரி!  என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்!  ஆனால் எங்கு தேடுவது?
          ஏன் கவலைப்படுகிறீர்கள்?  முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை),  புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.  இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன.  பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.com/, http://www.peyar.in/, http://wapedia.mobi/ta, http://thamizppeyarkal.blogspot.com/,http://tamilsaral.com/news%3Fid%3D3857.do, http://www.sillampum.com/, http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?
            இல்லை.  குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம். 
வணிக நிறுவனங்களுக்குமா? 
ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?
            ஒன்றும் கவலையில்லை.  தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா?  ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா?  ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா?  ‘நாயர்’ கடைகள் இல்லையா?

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்?  இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?
          தமிழில் படம் எடுக்கிறார்கள்.  கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது.  படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள்.  ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும்.  நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?
            அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை.  எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள்.  அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள்.  ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது.  அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள்.  பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா?  தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா? 
அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும்.  நாம் தமிழர் அல்லவா!  எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும். 

Sunday, April 10, 2011

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய மூத்தவன்

உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்

கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.

மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.

அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,

கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி   தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்

மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்

வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்

வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!

தமிழனாய் வாழ்வோம்
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!

நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.

பிடித்தது :)