Thursday, May 17, 2012

புள்ளி - தனிப்பாடல் : வார்த்தை விளையாட்டு

புள்ளி:
நேர் இழையார் கூந்தலில் ஓர் புள்ளி பெற நீள் மரமாம்,
நீர்நிலை ஓர் புள்ளி பெற நெருப்பாம், சீரிய
காடு ஒன்று ஒழிப்ப இசை ஆகும் அதனுள்ளும்
மீட்டு ஒன்று ஒழிப்ப மிடறு
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: தெரியவில்லை
அழகிய இழையைப் போன்ற பெண்களின் கூந்தலில் ஒரு பொட்டு வைத்தால், அது நீண்ட மரமாக மாறிவிடும்.
நீர்நிலையில் ஒரு புள்ளி வைத்தால், அது நெருப்பாக மாறிவிடும்.
காடு ஒன்றை எடுத்து அதில் ஒரு மாத்திரையை நீக்கினால், அது இசையாக மாறிவிடும். பின்னர் அதில் இன்னொரு மாத்திரையை நீக்கினால், அது கழுத்தாக மாறிவிடும்.
பொருள்
  • என்னது? பொண்ணுங்க கூந்தல்ல பொட்டு வெச்சா அது மரமாயிடுமா? தண்ணியில பொட்டுவெச்சா நெருப்பாயிடுமா? என்னய்யா உளறல் இது?
  • சற்றுப் பொறுங்கள். இந்தப் புதிர்ப் பாட்டுக்கு விடை தெரியவேண்டுமென்றால் நாம் கொஞ்சம் பழங்கதை பேசவேண்டும்
  • அந்தக் காலத்துத் தமிழில் ஒ, ஓ, எ, ஏ என்று நான்கு எழுத்துகள் கிடையாது. ஓ, ஏ என்று இரண்டு எழுத்துகள்தான்.
  • அப்போ ஒ, எ இரண்டையும் எப்படி எழுதுவார்கள்?
  • இப்படிதான்:
  • 1. ’ஓ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘ஒ’
  • 2. ‘ஏ’ என்று எழுதி அதன்மேல் ஒரு புள்ளி வைத்தால், அது ‘எ’
  • இந்தப் பின்னணியுடன் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை வாசித்தால் அர்த்தம் புரியும்
  • பெண்களின் கூந்தல் = ‘ஓதி’
  • அதில் ‘ஓ’ என்ற எழுத்தில் ஒரு புள்ளி வைத்தால், அது ‘ஒ’ என மாறும், ஆகவே ‘ஓதி’ என்பது ‘ஒதி’ என மாறும், அது ஒரு மரத்தின் பெயர்
  • அடுத்து, நீர்நிலை = ‘ஏரி’
  • இதில் ‘ஏ’ என்ற எழுத்தில் ஒரு புள்ளி வைத்தால், அது ‘எ’ என மாறும், ஆகவே ‘ஏரி’ என்பது ‘எரி’ என மாறும், அது நெருப்பின் பெயர்
  • அடுத்து, ‘காந்தாரம்’ என்பது காட்டைக் குறிப்பிடும் ஒரு சொல், அதில் ஒரு மாத்திரையை நீக்கினால், அதாவது ‘கா’ என்பதற்குப் பதில் ‘க’ என்று மாற்றினால், ‘கந்தாரம்’, அது ஓர் இசை / பண்ணின் பெயர்
  • இந்தக் கந்தாரத்தில் இன்னொரு மாத்திரையை நீக்கினால், அதாவது ‘தா’ என்பதற்குப் பதில் ‘த’ என்று மாற்றினால், ‘கந்தரம்’ அதாவது கழுத்து
  • இப்போது பாட்டை மீண்டும் படியுங்கள், புலவரின் அட்டகாசமான வார்த்தை விளையாட்டு புரியும் :>
  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
    நேரிழையார் கூந்தலிலோர் புள்ளிபெற நீள்மரமாம்
    நீர்நிலைஓர் புள்ளி பெறநெருப்பாம், சீரிய
    காட்டொன் றொழிப்பஇசை யாகும் அதனுள்ளும்
    மீட்டொன் றொழிப்ப மிடறு

நன்றி: தினம் ஒரு பா http://365paa.wordpress.com/2012/05/16/315/

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)